கத்திரிக்கோல் குத்துப்பட்டு சிகிச்சையில் இருந்த வாலிபர் சாவு
திருப்பூர், ஏப்.2-
திருப்பூரில் கத்திரிக்கோல் குத்துப்பட்டு சிகிச்சையில் இருந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து 2 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பணத்தகராறு
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானிநகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த மாரியப்பன் (45) என்பவரிடம் ரூ.8,500 கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி இரவு, மாரியப்பன், தனது நண்பரான முனியசாமி (23) என்பவருடன் சக்திவேலின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அங்கு சக்திவேல் இல்லை.
வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேலின் நண்பரான திருப்பூர் கொங்கு மெயின் ரோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனை பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (29) அங்கு சென்று தட்டிக்கேட்டுள்ளார். தொடர்ந்து பிரச்சினை ஏற்படவே, ஒரு கட்டத்தில் மாரியப்பன், முனியசாமி ஆகியோர் சேர்ந்து கத்திரிக்கோலால் மணிகண்டனின் மார்பு, வயிறு பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது.
கொலை வழக்காக மாற்றம்
படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, மாரியப்பன் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மணிகண்டன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----