மனைவியை சரமாரியாக வெட்டிக்கொன்ற தொழிலாளி
பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப தகராறு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த தென்கரை அருகேயுள்ள வலையபட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், தற்போது கிராமத்தில் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா (48). இவர்களுக்கு 18 வயதில் சண்முகவள்ளி என்ற மகளும், 16 வயதில் சண்முகசுந்தரம் என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், மல்லிகாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
வெட்டிக்கொலை
மல்லிகாவுக்கு தலை, காது, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நாச்சியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மல்லிகாவின் உடலை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.