வாலிபரின் தலையை துண்டித்து எடுத்துச்சென்ற பயங்கரம்


வாலிபரின் தலையை துண்டித்து எடுத்துச்சென்ற பயங்கரம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கண்மாய்க்கு அழைத்துச்சென்று வாலிபரின் தலையை துண்டித்து எடுத்துச்சென்ற பயங்கர சம்பவம் நடந்தது. அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் புதரில் கிடந்த தலையை போலீசார் மீட்டனர்.

சிவகங்கை

மானாமதுரை,

கண்மாய்க்கு அழைத்துச்சென்று வாலிபரின் தலையை துண்டித்து எடுத்துச்சென்ற பயங்கர சம்பவம் நடந்தது. அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் புதரில் கிடந்த தலையை போலீசார் மீட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிரைவர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவருடைய மகன் ராமு (வயது 24). டிரைவர். விவசாயமும் செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் ராமுவிடம் பேசி வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் உள்ளவர்களிடம் தனது நண்பருடன் மானாமதுரை அருகே இம்மநேந்தல் கண்மாய் பகுதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ராமு சென்றுள்ளார்.

இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவருடைய அண்ணன் சரத் தேடிச்சென்றார். கண்மாய் கரை அருகே ராமுவின் மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. அதில் ரத்தக்கறையும் காணப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது உறவினர்களிடமும், மானாமதுரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

தலையை துண்டித்து கொலை

ராமுவின் உறவினர்கள் திரண்டு வந்து கண்மாய் முழுவதும் தேடினர். அப்போது, அந்த பகுதியில் ஒரு இடத்தில் ராமு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

அதாவது, ராமுவின் தலை துண்டித்து எடுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மட்டும் அங்கே கிடந்தது. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மானாமதுரை போலீசார் விரைந்து வந்து, ராமுவின் உடலை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலையில் ராமுவின் தலையை அந்த பகுதி முழுவதும் போலீசார், தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் கண்மாயிலும், தண்ணீருக்குள் இறங்கியும் தேடினர். ஆனால் தலை கிடைக்கவில்லை. இதற்கிடையில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்ட ராமுவின் உடலில் தலை இல்லாததால் பிரேத பரிசோதனை கூடத்துக்குள் அவரது உடல் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இரவு முழுவதும் ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே ராமுவின் உடல் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

புதரில் கிடந்த தலை

இந்தநிலையில் ராமுவின் தலை, மானாமதுரை அருகே பள்ளமிட்டான் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றின் கரையில் உள்ள புதரில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தலையை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதாவது ராமுவின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அவரது தலை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ராமுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவம் நடப்பதற்கு முன்பாக அவரை போனில் பேசி வரவழைத்து கண்மாய்க்கு அழைத்துச்சென்ற அவரது நண்பரான பார்த்திபனூரை சேர்ந்த பிரபாகரனை (24) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்தான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியஅக்கிரமேசியை சேர்ந்த பாலமுருகனையும் (25) கைது செய்தனர்.

காரணம் என்ன?

இந்த படுகொலை தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

இந்த சம்பவத்தில் கைதான பிரபாகரன் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண், கொலையுண்ட ராமுவின் உறவினர் ஆவார். இந்த திருமணம் ராமுவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பிரபாகரன், பாலமுருகன் சேர்ந்து ராமுவை கொலை செய்ததாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கண்மாய்க்கு அழைத்துச்சென்று தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story