வெள்ளக்கல் அருகே வனப்பகுதியில் ஆண் அடித்துக்கொலை?-உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை


வெள்ளக்கல் அருகே வனப்பகுதியில் ஆண் அடித்துக்கொலை?-உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

வெள்ளக்கல் அருகே வனப்பகுதியில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி, அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வனப்பகுதியில் ஆண் பிணம்

தர்மபுரி மாவட்டம் வெள்ளக்கல் அருகே தொப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கரடி, செந்நாய், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று வனத்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தொப்பூர் போலீசுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அடித்துக்கொலை?

பின்னர் அவர்கள் சம்பவ இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்தனர். பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற எந்த விவரங்களும் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அல்லது வனப்பகுதியில் தற்கொலை செய்து கொண்டாரா?, அவருடைய முகத்தை வன விலங்குகள் கடித்து சிதைத்தனவா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணை

ஆனால் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவந்தால் தான் சம்பவம் நடந்தது எப்படி? என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வனக்காப்பாளர் தாரணி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடந்து வருகிறது.


Next Story