சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலம் மனைவி-மகன் உள்பட 3 பேர் கைது


சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பம்:  கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலம்  மனைவி-மகன் உள்பட 3 பேர் கைது
x

சாத்தான்குளம் அருகே தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது. இதுதொடர்பாக மனைவி-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

தொழிலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது. இதுதொடர்பாக மனைவி-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தொழிலாளி மர்ம சாவு

சாத்தான்குளம் அருகே அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள் (55). இவர்களுக்கு பெனிஸ்கர் (22) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி, நெல்லை மாவட்டம் உவரியில் வசித்து வருகிறார். மகன், சென்னையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மகாராஜன் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், மகாராஜன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது.

கழுத்தை இறுக்கி கொலை

இதுதொடர்பாக மகாராஜனின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பெனிஸ்கர் தன்னுடைய தந்தை மகாராஜனிடம், வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறும், அதனை வங்கியில் அடகு வைத்து பணம் வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு மகாராஜன் மறுத்ததால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெனிஸ்கர் கயிற்றால் மகாராஜனின் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு முருகம்மாள், மகள் இசக்கி ரேவதி (28) ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டு, மகாராஜனை பிடித்து கொண்டதாக தெரிகிறது. இதில் மூச்சுத்திணறி மகராஜன் இறந்தது தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மகன் பெனிஸ்கர், முருகம்மாள், மகள் இசக்கி ரேவதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை சாத்தான்குளம் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story