7 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்


7 பேர் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
x

தஞ்சை அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டி கொன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்‌ ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே ஜாமீனில் வந்த வாலிபரை வெட்டி கொன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்‌ ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போலீஸ் நிலையம் முன்பு கைதானவர்களின் உறவினர்கள் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் பறிப்பு

தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்போஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபஸ்டின். இவருடைய மகன் பிரின்ஸ்லாரா என்ற சின்னா(வயது28). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தஞ்சை அருகே மாதா கோட்டையில் சின்னா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் செல்போனை பறித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது எதிர்தரப்பை சேர்ந்த ஒரு வாலிபரை சின்னா மற்றும் அவருடைய கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் வெட்டினர். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் சின்னா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சின்னா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெட்டிக்கொலை

சிறையில் இருந்த சின்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளி வந்தார். சம்பவத்தன்று திருக்கானூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு மாதா கோட்டையில் இருந்து சின்னா மோட்டார் சைக்கிளில் சென்றார். இதனை அறிந்த ஒரு மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிள்களில் சின்னாவை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டனர். சின்னாவை அக்கம்பக்கத்தினர் மற்றும் வல்லம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னா உயிரிழந்தார்.

பறிமுதல்

இது குறித்து வல்லம் பேலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் கொலையாளிகள் பதுங்கி இருந்த இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் பேரில் வல்லம்- மருத்துவக்கல்லூரி சாலை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வளாக பகுதியில் மறைந்திருந்து அவ்வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

7 பேர் கைது

பிடிபட்ட 7 பேரையும் போலீசார் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), ராஜேஷ்(23), புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்த விஜய்(26), ஒரத்தநாட்டை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த அஷ்ரப்அலி(19), கோரிகுளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(19), தஞ்சை விளார் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதிஸ்வரன்( 28) என்றும் முன்விரோதம் காரணமாக இவர்கள் 7 பேரும் சேர்ந்து சின்னாவை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கதறி அழுதனர்

கொலை நடந்த 48 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த போலீசாருக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டு தெரிவித்தார்.முன்னதாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் போலீஸ் நிலையம் முன்பு கூடி கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story