வாழப்பாடி அருகே கொத்தனார் கழுத்தை அறுத்து கொலை: தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்து காதலை வளர்த்ததால் தீர்த்துக்கட்டினேன்-கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
வாழப்பாடி அருகே கொத்தனார் கொலை செய்யப்பட்ட வழக்கில், தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்து காதலை வளர்த்ததால் தீர்த்துக்கட்டினேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
வாழப்பாடி:
கொத்தனார்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பராயன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 23). கொத்தனாரான இவர் ஏத்தாப்பூர் முருகன் கோவிலில் பூக்கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு சக்திவேல் துக்கியாம்பாளையம் வடக்கு காடு பகுதியில் படுகாயங்களுடன் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது, 18 வயது சிறுமியுடனான காதல் விவகாரத்தில் சக்திவேல் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியின் அண்ணன் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அப்போது தொழிலாளியான சிறுமியின் அண்ணன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
சக்திவேலும், 18 வயது சிறுமியும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் அவர்கள் காதலை கைவிடும்படி கூறினர். ஆனால் அவர் சக்திவேலுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
சிறுமிக்கு செல்போன்
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர், சிறுமியுடன் பேசக்கூடாது என்று கூறி சக்திவேலை எச்சரித்துள்ளனர். ஆனால் அவரும் காதலை கைவிட மறுத்துள்ளார். இதனிடையே சக்திவேல், தனது காதலை மேலும் வளர்க்க சிறுமிக்கு புது செல்போனை வாங்கி கொடுத்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது, செல்போன் மூலம் பேசுவது, மெசேஜ் அனுப்புவது என்று சிறுமி தனது காதலை தொடர்ந்துள்ளார்.
இது அவருடைய அண்ணனுக்கு தெரியவந்ததால், சக்திவேல் மீது கடும் கோபமடைந்தார். மேலும் அவரை தீர்த்துக்கட்ட எண்ணினார். அதன்படி அவர், 17 வயது சிறுவன் மற்றும் உறவினர் ஒருவருடன் இணைந்து சக்திவேலை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
3 பேர் கைது
இந்த திட்டத்தின்படி சம்பவத்தன்று இரவு சிறுமியின் அண்ணன், 17 வயது சிறுவன் மற்றும் உறவினரான வாலிபர் ஒருவர் என 3 பேரும் சேர்ந்து, மோட்டார் சைக்கிளில் சென்ற சக்திவேலை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இருட்டான பகுதியில் வைத்து அவரை சரமாரியாக தாக்கி அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் அண்ணன் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சிறுமியின் உறவினரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்து காதலை வளர்த்த ஆத்திரத்தில் கொத்தனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.