பெண் உள்பட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
பெண் உள்பட 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர்
பல்லடம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்த கணவரை கொன்ற வழக்கில் கொலை வழக்கில் அவரது மனைவி உள்பட 7 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தொழிலாளி கொலை
திருப்பூரை அடுத்த பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கோபாலன் (வயது 35) என்பவர் தனது மனைவி சசீலா (32) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கோபாலன் சின்னக்கரை அருகில் உள்ள பனியன் நிறுவனத்திலும், சுசீலா அருள்புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்.
கடந்த மே மாதம் 4-ந் தேதி கோபாலன் வேலைக்கு சென்றவர், மாலையில் சின்னக்கரையிலிருந்து லட்சுமி நகர் செல்லும் ரோட்டில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். பல்லடம் போலீசார் இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
குண்டர் சட்டம்
போலீசார் நடத்திய விசாரணையில் கோபாலனின் மனைவி சுசீலாவும், அவர் வேலைக்கு சென்ற பனியன் நிறுவனத்தின் மேலாளரான, கள்ளக்காதலன் மாரீஸ்வரன் இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கோபாலனை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மாரீஸ்வரன் (26), கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த விஜய் (28), மதுரை மேலூரை சேர்ந்த மதன்குமார் (21), மணிகண்டன் (24), குளித்தலையை சேர்ந்த லோகேஸ்வரன் (20), வினோத் (28), கோபாலின் மனைவி சுசீலா ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் முன்மொழிவின்படி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்படி, 7 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாரீஸ்வரன் (26), விஜய் (28), மதன்குமார் (21), மணிகண்டன் (24), லோகேஸ்வரன் (20), வினோத் (28), கோபாலின் மனைவி சுசீலா ஆகிய 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-----