முருகன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்
விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விராலிமலை:
விராலிமலை முருகன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருக பெருமான் ஆறுமுகங்களுடன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு அருணகிரிநாதருக்கு முருகன் அஷ்டமாசித்திகளை வழங்கி திருப்புகழ் பாட செய்த தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து அன்று முதல் காலை, மாலை இரு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், நாகம், பூதம், யானை, சிம்மம், வெள்ளி குதிரை மற்றும் பல்லக்கு போன்ற பல்வேறு வாகனங்களில் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தேரோட்டம்
8-ம் திருவிழாவான நேற்று மாலை முருகன் வெள்ளி குதிரை வாகனத்தில் தனது மாமன் பெருமாள் வசிக்கும் ஊரான விராலூருக்கு எழுந்தருளி அங்கு மண்டகபடி முடித்து இன்று அதிகாலை விராலிமலை வந்தடைந்தார். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் முருக பெருமான் வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளினர். காலை 10.10 மணிக்கு புதுக்கோட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என்ற பக்தி கோஷம் மற்றும் மேள தாளம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியில் கூடியிருந்த பக்தர்கள் முருக பெருமானுகு்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் 11.50 மணிக்கு கோவில் நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தின் போது நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் விராலிமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளை தெப்ப உற்சவம்
விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழி அரசு தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
நாளை (திங்கட்கிழமை) மதுரை சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) விடையாற்றியுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.
முருக பெருமானுக்கு
நெல்மணிகளை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் நெல்சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், அறுவடை செய்த நெல்மணிகளில் ஒரு பகுதியை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவதை விவசாயிகள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தின் போது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்து வைத்திருந்த நெல்மணிகள், கடலை உள்ளிட்டவற்றை கோவிலுக்கு சுமந்து கொண்டு வந்தனர். பின்னர் மலைமேல் ஏறுவதற்கான வழியில் உள்ள படிகளில் நெல்மணிகளை கொட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அவர்கள் மலைமீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.