இசை கச்சேரி விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு சரத்குமார் ஆதரவு


இசை கச்சேரி விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு சரத்குமார் ஆதரவு
x

இசை கச்சேரி விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு சரத்குமார் ஆதரவு.

சென்னை,

நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அனுதாபமும், உணர்ச்சியும் மிக்க நபர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். மக்கள் விழிப்புணர்வு பெற இந்த முறை நான் பலி ஆடு ஆகிறேன் என்று அவர் பதிவிட்டிருப்பது என்னை நெகிழ்ச்சியடைய செய்தது. இசை உலகிலும், பொதுவெளியிலும் ஏ.ஆர்.ரகுமானை நினைத்து பெருமைப்படுகிறோம்.

சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் இடம்கிடைக்காத நிலையில் அரங்கிலும், நுழைவாயிலிலும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட ரசிகர்கள், ஏ.ஆர்.ரகுமானின் பதிலை பார்த்து நிச்சயம் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். இந்த விஷயத்தில் அவருடன் நாங்கள் நிற்கிறோம். அவரது பதில்களை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம்.

வரிசையை பின்பற்றுவது, போக்குவரத்து விதிகளை மதிப்பது நமது சுய ஒழுக்கத்திலும் அடங்கும். இதில் யாரையும் குறை சொல்லமுடியாது. மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ஆண்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். பகுதிகளில் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப்பணிகள் நடைபெறுவதால், அந்த இடத்தை நோக்கி மக்கள் ஒரே நேரத்தில் பயணிப்பது மிகவும் சவாலானது. கூட்டத்தை ஒழுங்கமைப்பதில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதேவேளை சாலை விதிகளை மீறும் ஒவ்வொரு நபரும் இதில் பொறுப்பேற்கத்தான் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story