திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக முசிறியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவு
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக முசிறியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக முசிறியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வங்கக்கடலில் கடந்த 9-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி இன்று (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த மழை ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என தெரிவித்து இருந்தது.
தொடர் மழை
அதன்படி, நேற்று அதிகாலை 2 மணி முதலே திருச்சி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. திருச்சி மாநகரில் மதியம் 2 மணி வரை இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது பலத்த மழையும், சில சமயங்களில் சாரல் மழையும் பெய்தது. பின்னர் மாலை 4 மணிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12 மணிக்கு மேலும் நீடித்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர் மழை காரணமாக மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலை சந்திப்புகளில் பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்ட படி ஊா்ந்து சென்றன. குறிப்பாக திருச்சி தலைமை தபால் நிலைய பகுதி, மன்னார்புரம் பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது.
பலத்த மழை காரணமாக காலையில் வேலைக்கு சென்றவர்கள் பலர் நனைந்து கொண்டும், குடை பிடித்தபடியும் சென்றனர். மழையால் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
12 மணி நேரத்தில் 56.50 செ.மீ. மழை
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு பல பகுதிகளில் சாக்கடை கால்வாயை தூர்வாரி மண்ணை அள்ளியதால், பிரதான சாலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கவில்லை. வடிகால் வசதி இல்லாத விரிவாக்க பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கிநின்றதை காண முடிந்தது. மேலும் மாநகரில் மத்திய பஸ்நிலையம் அருகே மரங்கள் முறிந்து விழுந்தன. அதை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் இருந்த சுமார் 200 ஆண்டு பழமையான இச்சிமரம் ஒன்று குடியிருப்பில் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.
இதேபோல் முசிறி, கல்லக்குடி, புள்ளம்பாடி, கோவில்பட்டி, மணப்பாறை, சமயபுரம், துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முசிறியில் 47 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ள 12 மணி நேரத்தில் மொத்தம் 56.50 சென்டிமீட்டர் மழை பதிவானது.இந்த தொடர்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன. சம்பா சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.