ஈரோடு வ.உ.சி. பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு
ஈரோடு வ.உ.சி. பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு வ.உ.சி. பூங்கா ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
சிறப்பு தொழுகை
முஸ்லிம்களின் முக்கிய விழாவான பக்ரீத் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நேற்று முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகை தொடங்கியது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமை தாங்கி தொழுகை நடத்தி வைத்தார். தொழுகையில் ஈரோடு மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வந்து கலந்து கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா பேசினார். தொழுகை முடிந்ததும் அனைவரும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதுபோல் குழந்தைகளும் புத்தாடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டனர்.
தியாகத்திருநாள்
பக்ரீத் குறித்து அரசு முதன்மை காஜி முகமது கிபாயத்துல்லா கூறியதாவது:-
இப்ராகிம் நபி, அல்லா மீது அளவற்ற நம்பிக்கை கொண்டு இருந்தார். இப்ராகிம் நபியின் மகனை பலியிட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட, மகிழ்ச்சியுடன் மகனை பலி பீடத்துக்கு கொண்டு சென்றார். அவரது நம்பிக்கையை பார்த்து மகிழ்ந்த இறைவன் பலியில் இருந்து மகனை மீட்டு, அவருக்கு பதிலாக ஒரு ஆட்டுக்குட்டியை வழங்கி பலியிட செய்கிறார். இறைவனின் கட்டளைக்காக மகனையே தியாகம் செய்ய துணிந்த இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் தியாகத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் கடவுளுக்கு பலியாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை கொடுக்கப்படுகிறது. இந்த பலி பொருட்களை தாங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு இருக்காமல் ஏழைகள், சுற்றத்தாருக்கும் வழங்குவது வழக்கம். தற்போதைய காலக்கட்டத்தில் முஸ்லிம்கள் மட்டுமே தியாகத்திருநாள் குர்பானியை சாப்பிடுவது இல்லை. தங்கள் நண்பர்கள், பிற மத சகோதரர்களுக்கும் பகிர்ந்து இந்த விழாவை அர்த்தமுள்ள விழாவாக கொண்டாடி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
500 பள்ளி வாசல்கள்
பக்ரீத் திருநாளையொட்டி நேற்று முஸ்லிம்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப குர்பானியாக ஆடு அல்லது மாடுகள் வெட்டி தங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து கொண்டனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் நேற்று பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், 49 ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
ஈரோடு பெரியார் நகரில் நடந்த பக்ரீத் விழாவில் முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ தொழுகையில் ஈடுபட்டனர்.