10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்


10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்
x

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் முன்னணி கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திருநெல்வேலி

முஸ்லிம் முன்னணி கழக நிர்வாகிகள் கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கோவை செய்யது தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் பாளை.பாரூக், அன்வர் சதாத், யூசுப், சவுகத், மாவட்ட பொறுப்பாளர் அலிப் பிலால்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் மற்றும் விசாரணை கைதிகளை சாதி, மத பாரபட்சமின்றி அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மேலை நாடுகளில் போல விகிதாச்சார தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும். மாநிலம் முழுவதும் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் வீரையா அப்துல், பால்சேக், பாளை. செய்யது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அப்பாஸ் ஹல்மி நன்றி கூறினார்.

இதைத்தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் கோவை செய்யது நிருபர்களிடம் கூறுகையில், நாட்டில் அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடுவோம் அரசு முஸ்லிம்களை இந்த நாட்டில் சமமாக நடத்த வேண்டும். நாட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். முஸ்லிம் மார்க்கம் அமைதியையும், சமாதானத்தையும் விரும்பக்கூடியது. தீவிரவாதத்தையும், படுகொலையை எதிர்க்கக்கூடிய மார்க்கமாகும். தற்போது நாட்டில் நடைபெறுகின்ற பிரச்சினைகளில் தீவிரவாதம் முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. அதன் விசாரணை நேர்மையாக இருந்தால் நன்றாக இருக்கும், என்றார்.


Next Story