பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சேலம்

சிறப்பு தொழுகை

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. தியாக திருநாளாக கொண்டாடப்படும் இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுத்து கொண்டாடுவார்கள். இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பள்ளிவாசல், மசூதிகளில் அதிகாலையில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சேலம் ஜாமீயா பள்ளிவாசலில் நேற்று காலை நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதேபோல், கோட்டை, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், அன்னதானப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மசூதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

ஈத்கா மைதானத்தில்

மேலும், பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கினர். பக்ரீத் பண்டிகை நாளில் இறைதூதர் நபியின் வழியில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை குர்பானி எனப்படும் புனித பலி கொடுப்பது வழக்கம். அதன்படி, தொழுகை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு திரும்பிய முஸலிம்கள் குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி சிலர் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து கொடுத்தனர்.

சேலம் சூரமங்கலம் நூருல் இஸ்லாம் ஈத்கா மைதானத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தம்மம்பட்டி

தம்மம்பட்டி கடைவீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக புறப்படடனர். கடைவீதி வழியாக பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஈத்கா மைதானத்துக்கு வந்தனர். அங்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. ஈத்கா மைதான பள்ளிவாசல் இமாம் ஹபிபுர்ரஹ்மான் ஹசனி தலைமையில் தொழுகை நடந்தது. முன்னதாக கடைவீதி ஜாமியா மஸ்ஜித் இமாம் அப்துல் ஹக்கிம் யூசுபி பிராத்தனை செய்தார்.

தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக 3-வது வார்டு முஸ்லிம் தெரு பகுதியில் இருக்கும் கபர்ஸ்தான் மயானம் பகுதியில் இறந்தவர்களுக்கு ஊதுபத்தி பொறுத்தி சிறப்பு பிராத்தனை நடந்தது. அங்கிருந்து பள்ளிவாசல் சென்று முஸ்லிம்கள் வீடு திரும்பினர். தொடர்ந்து ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தனர். இதேபோல் செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கீரிப்பட்டி பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அங்குள்ள பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் நடந்தனர்.

தலைவாசல்

தலைவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக தலைவாசல் முத்தவல்லி சவுகத்அலி தலைமையில் முஸ்லிம்கள் ராஜவீதியில் உள்ள மசூதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பஸ் நிலையம், போலீஸ் நிலையம், வசிஸ்ட நதி பாலம் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை கூறினர். தலைவாசல், தேவியாகுறிச்சி காட்டுக்கோட்டை, வீரகனூர் ஆகிய பகுதிகளிலும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகைகொண்டாடினர்.

கெங்கவல்லி அருகே இலுப்புதோப்பு ஈதுஹா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. கெங்கவல்லி வடக்குத்தெரு பள்ளிவாசல் முத்தவல்லி லியாகத்அலி, செயலாளர் முஸ்தாக், தெற்கு பள்ளிவாசல் முத்தவல்லி ஹபிபுல்லா ஆகியோர் முன்னிலையில் பேஷ் இமாம்கள் அமானுல்லா, சிக்கந்தர் ஆகியோர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. கெங்கவல்லி வடக்குத்தெரு பள்ளிவாசலில் இருந்து ஜமாத்தார்கள் கடைவீதி வழியாக கெங்கவல்லி வடக்குத்தெரு, தெற்குத்தெரு, ஜி.கே.பி.நகர் பள்ளிவாசல், ஆனையாம்பட்டி, தெடாவூர், 74 கிருஷ்ணாபுரம், கூடமலை மற்றும் நடுவலூர் ஆகிய பகுதிகளல் இருந்து திரளானவர்கள் இலுப்பத்தோப்பு சென்றடைந்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் கடைவீதி வழியாக வடக்கு தெரு பள்ளிவாசலை வந்தடைந்தனர்.


Next Story