போராட்டம் நடத்த பா.ஜனதாவுக்கு உரிமை இல்லை
போராட்டம் நடத்த பா.ஜனதாவுக்கு உரிமை இல்லை என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
காரைக்குடி,
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்த பா.ஜனதாவுக்கு உரிமை இல்லை என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
பொதுக்கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது. இதையொட்டி பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்தது. பாண்டியன் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணகிய தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாத்தையா வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இன்னும் அவர்களுக்கு கால அவகாசம் உள்ளது. அதை நிறைவேற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வலியுறுத்தும்.
என்ன ஆனது?
ஆனால் 2014-ல் மோடி தேர்தல் வாக்குறுதியாக கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ, 15 லட்சம் வரவு வைப்பேன். ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றும் பல்வேறு வாக்குறுதிகள் கூறினார். 8 ஆண்டுகள் கடந்து விட்டது உங்கள் வாக்குறுதிகள் என்ன ஆனது? மத்திய அரசின் காலி பணியிடங்களை கூட நிரப்ப மறுக்கின்றனர்
விலைவாசிகள் விண்ணை முட்டுகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகுகிறது. இலங்கையில் நடந்ததுபோல இந்தியாவிலும் நடக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள். நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து மதத்தால், ஜாதியால் பிரித்தாளும் சூழ்ச்சியால் அரசியல் ஆதாயம் தேட இனியும் முடியாது. மக்கள் ஒன்று கூடினால் என்ன நடக்கும் என்பதை இலங்கை உணர்த்தி இருக்கும். நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் பங்கேற்பது கிடையாது. சட்டங்கள் சர்வாதிகார நடைமுறையில் இயற்றப்படுகிறது.
மாநில மாநாடு
திருப்பூரில் ஆகஸ்டு 9-ந் தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் சந்தானம், முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, ஏ.ஐ.டி.சி. மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
========