சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்


சாமிதோப்பில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்
x
தினத்தந்தி 8 April 2023 10:00 AM IST (Updated: 8 April 2023 10:04 AM IST)
t-max-icont-min-icon

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்ட முத்துக்குடை ஊர்வலம் நடந்தது.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்ட முத்துக்குடை ஊர்வலம் நடந்தது.

முட்டப்பதி

சாமிதோப்பு தலைமைப் பதியில் அய்யா வைகுண்ட சாமி வடக்கு வாசலில் 6 வருடங்கள் பக்தர்களுக்காக தவமிருந்தார். இந்த தவம் நிறைவு பெற்றபிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவரை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்டசாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

முட்டப்பதியிலிருந்து சாமிதோப்பு வந்த கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவருடனும் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசுவாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார். அங்கு பக்தர்கள் கடற்கரையில் காத்திருக்க வைகுண்டசாமி திருப்பாற் கடலுக்குள் சென்று திருமாலுடன் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

முத்துக்குடை ஊர்வலம்

அதன்படி ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் செல்லும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம். அதே போல் நேற்று காலை 6 மணிக்கு தலைமை பதியிலிருந்து முத்து குடை ஊர்வலம் தொடங்கியது.

முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், வாகன பவனியும், காலை 6 மணிக்கு தலைமைப்பதி முன்பிருந்து மேளதாளங்கள் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது.

சிறப்பு வழிபாடு

இந்த ஊர்வலத்தை குரு பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார். குரு நேம்ரிஷ் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். குருமார்கள் பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெற்றது.

முத்து குடை ஊர்வலம்

நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்து முட்டப்பதி பால் கடலில் பதமிட்டு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

மீண்டும் மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story