முத்துமாலை அம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழாவுக்கு கொடியேற்ற நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வாக வருகிற 5-ந் தேதி இரவு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், பாண்டு வாத்தியம் முன் செல்ல அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கற்பக பொன் சப்பரத்தில் சிறுத்தொண்டநல்லூர் நகர் வலம் வருதல் நடக்கிறது. 6-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன் கற்பகப் பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோவில் வந்து சேர்தல், நட்டார் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, காலை 10 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, காலை 11 மணிக்கு அம்மன் ஏரல் மெயின் பஜாரில் உலா வருதல் நடைபெறும். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு ஏரல் சேனையர் சமுதாய உச்சிமாகாளி அம்மன் கோவில் கோவிலில் சிறப்பு பூஜை, பகல் 2 மணிக்கு அம்மன் ஏரல் தனது பேட்டை பந்தலில் அமர்தல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சேர்மன் அருணாசல சுவாமி கோவில் சார்பாக சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஏரல் நகர் உலா புறப்படுதல், அதிகாலை 3 மணிக்கு உலா சென்ற அம்மன் சிறுத்தொண்டநல்லூர் கோவில் வந்து அமர்தல், அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.