திருப்புவனம் அருகே முத்துமாரியம்மன் கோவில் விழா: 7 அடி உயர முள் படுக்கையில் ஆடியபடி அருள்வாக்கு கூறிய பெண் சாமியார்


முத்துமாரியம்மன் கோவில் விழாவில், 7 அடி உயர முள்படுக்கையில் ஆடியபடியும், படுத்துக்கொண்டும் பெண் சாமியார் அருள் வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

முத்துமாரியம்மன் கோவில் விழாவில், 7 அடி உயர முள்படுக்கையில் ஆடியபடியும், படுத்துக்கொண்டும் பெண் சாமியார் அருள் வாக்கு கூறினார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மண்டல பூஜை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக பெண் சாமியார் நாகராணி அம்மாள் இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை விழா நடைபெறும். அப்போது நாகராணி, 48 நாட்கள் விரதம் இருப்பார். விரதத்தின் இறுதி நாளன்று முள்படுக்கை மீது நின்றுகொண்டும், ஆடியபடியும், முள் படுக்கையில் படுத்தும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார்.

இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி, அவர் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று காப்பு கட்டி விரதம் ெதாடங்கினார். நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நேற்று 48-வது நாளை முன்னிட்டு பூங்காவன முத்துமாரி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது. பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முள்படுக்கையில் அருள்வாக்கு

விழாவையொட்டி கோவிலின் முன்புறம் சுமார் 7 அடி உயரத்திற்கு உடைமுள், கற்றாழை முள், இலந்தை முள் உள்ளிட்டவற்றை கொண்டு முள் படுக்கை அமைக்கப்பட்டு இருந்தது. சாமியார் நாகராணியிடம் அருள்வாக்கு பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் முள் படுக்கையை சுற்றி நின்றிருந்தனர். முன்னதாக கோவில் பூசாரி மாரிமுத்து, முள் படுக்கைக்கு தீபாராதனை காண்பித்தார். பின்னர் நாகராணி அந்த முள் படுக்கையில் நின்றபடியும், சாமி ஆடியபடியும், முள் படுக்கையில் படுத்த நிலையிலும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

இந்த மண்டல பூஜை விழாவில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story