முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
வெள்ளியணை அருகே உள்ள கத்தாளபட்டியில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதனையடுத்து சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஊர் பொதுகிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் புனித நீர், இளநீர், பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நேற்று அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல், பால்குடம் எடுத்தல் என பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மேலும் கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் ஊர் மக்கள் வழிபாடு செய்தனர். இன்று மஞ்சள் நீராடுதலுடன் கரகம் பொதுகிணற்றில் விடப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.