முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா


முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுப்பம்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

விழுப்புரம்

விழுப்புரம்

முத்துமாரியம்மன் கோவில்

விழுப்புரம் அருகே சுப்பம்பேட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த 20-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து, 21-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், புற்றுமண் எடுத்தல், 108 மூலிகைகள் ஹோமம், முதல்கால யாக பூஜையும், நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், பூர்ணாகுதி, பாலகணபதி, பாலமுருகன், முத்துமாரியம்மனுக்கு யந்திரம், நவபாஷான ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 3-ம் கால யாகபூஜை, திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, சோடசோபசார பூஜைகளும் நடந்தன.

மகா கும்பாபிஷேகம்

இதனை தொடர்ந்து கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோ பூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 4-ம் கால யாக பூஜை, சுமங்கலி பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணியளவில் கடம் புறப்பாடாகி கோவிலின் விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுப்பம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சுப்பம்பேட்டை, கொய்யாத்தோப்பு கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story