தாலுகா அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
பகுதி நேர ரேஷன் கடை அமைக்காததை கண்டித்து பெண்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சிங்கம்புணரி,
பகுதி நேர ரேஷன் கடை அமைக்காததை கண்டித்து பெண்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
200 குடும்பங்கள்
சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் 165 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுகள் உள்ள அனைவரும் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கொண்ட அணைக்கரைப்பட்டியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து தங்கள் கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டும் என்று கடந்த 2 வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரிடம் பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன் பேரில் விரைவில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மராமத்து
பாரதிநகர் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுவிற்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தை மராமத்து செய்து ரேஷன் கடைக்காக தயார் செய்த கட்டிடம் தயார் நிலையில் உள்ளது. ஆனால் இன்றுவரை ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து அந்த பகுதி கிராம பெண்கள் ரேஷன் கடை அமைக்காததை கண்டித்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்காக தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த தாசில்தார் கயல்செல்வி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் நேரு சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்து விரைவில் உங்கள் பகுதிக்கு பகுதி நேர ரேஷன் கடை கொண்டுவரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.