கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முற்றுகை
குடிமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொண்டம்பட்டி ஊராட்சி. கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அருகங்காடு தோட்டம் முதல் இலுப்பநகரம் எல்லைவரை சுமார் 1 கிலோ மீட்டர் சாலை உள்ளது. சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
கடந்த மாதம் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றகோரி நடப்பட்ட எல்லைகள் தொடர்பான கல்லை சிலர் அகற்றியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் கல்லை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மீண்டும் அளவீடு
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நில அளவை தொடர்பாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஏற்கனவே அளவீடு செய்து கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் நடப்பட்ட கல்லை சிலர் அகற்றியதாக கூறப்படுகிறதது. தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்த பின்னர் மீண்டும் அளவீடு செய்து கொடுக்கப்படும் என கூறினர்.