விவேகானந்தா சேவாலயத்தை முற்றுகையிட முயற்சி
திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து விவேகானந்தா சேவாலயத்தை முற்றுகையிட முயன்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
3 சிறுவர்கள் சாவு
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயத்தில் தங்கி படித்து வந்த 3 சிறுவர்கள் கெட்டு போன உணவு சாப்பிட்டு இறந்தனர். 11 மாணவர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட விவேகானந்தா சேவாலயம் முன்பு கடந்த 2 நாட்களாக ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் 3 சிறுவர்கள் உயிரிழந்ததை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நேற்று மாலை விவேகானந்தா சேவாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் சேவாலயத்தின் நிர்வாகியான செந்தில்நாதன் ஆ.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என்று பரவி வரும் தகவலை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை முதலே போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
95 பேர் கைது
இந்த நிலையில் மாலை 4 மணிக்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, விசைத்தறி தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., மக்கள் அதிகாரம், தேசிய தமிழ் புலிகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் திருமுருகன்பூண்டி சந்திப்பு அருகே திரண்டனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இயங்கும் விவேகானந்த சேவாலயத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், சேவாலயா நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்திற்கு திரண்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போலீசார் அனைவரையும் கட்டாயப்படுத்தி கைது செய்து வாகனங்களில் ஏற்றினார்கள். இதன்படி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 95 பேர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
போலீசார் குவிப்பு
இந்து முன்னணி சார்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. திருமுருகன்பூண்டியில் இரு தரப்பினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததால் அந்த பகுதி முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.