நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தண்ணீர் பிரச்சினை
திருமுருகன்பூண்டி நகராட்சி 3-வது வார்டு கருப்பராயன்கோவில் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி, ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கருப்பராயன் கோவில் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பும், மாகாளியம்மன் கோவில் அருகில் கேட்வால்வில் பழுதும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஜே.ஜே.நகரில் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு உப்பு தண்ணீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து 3-வது வார்டு கவுன்சிலர் காயத்ரி கார்த்திகேயன் நகராட்சி கமிஷனர் அப்துல்ஹாரிசிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அந்த வார்டில் பணியாற்றும் நகராட்சி பணியாளர்தான் மனு கொடுக்க வேண்டும் என்று கூறி கவுன்சிலரை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
முற்றுகை
இதையடுத்து அந்தநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் வார்டு நகராட்சி குடிநீர் பணியாளர் ராமசாமி என்பவர் இந்த கோரிக்கை தொடர்பாக கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 3-வது வார்டு கவுன்சிலர் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கமிஷனரை சந்தித்து கோரிக்கை தொடர்பாக முறையிட்டனர். உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாளை (இன்று) சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.