நலிவடைந்து வரும் மூங்கில் கூடை பின்னும் தொழில்


நலிவடைந்து வரும் மூங்கில் கூடை பின்னும் தொழில்
x
திருப்பூர்

இன்று திரும்பிய பக்கம் எல்லாம் பிளாஸ்டிக்... பிளாஸ்டிக்...பிளாஸ்டிக்... இதை தவிர்த்து விடுங்கள், அது நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் ஆபத்து என்று எவ்வளவோ எடுத்து ெசால்லியும் அது என்ன மாயமோ, மந்திரமோ பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியவில்லை. அரசும் அசுர வேகத்தை பயன்படுத்தினாலும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே பிளாஸ்டிக் பயன்பாடு மாறிப்போனது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பொதுமக்கள் பாரம்பரியமாக செய்து வந்த பல்வேறு கைத்ெதாழில்கள் நலிவடைந்து அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது. அதில் ஒன்றாக குறிப்பிடப்பட வேண்டிய தொழிலாக மூங்கில் கூடை பின்னும் தொழில் இருக்கிறது. தொழிலாளர்களின் கை வண்ணத்தில் உருவாகும் மூங்கில் பொருட்கள் வீடுகளுக்கு அத்தனை அழகு சேர்ப்பவை.

மூங்கிலை வைத்து அழகிய நேர்த்தியான பல்வேறு வடிவங்களில் கூடை தயாரித்து வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் வீட்டுக்கூடை, முறம், வெற்றிலைக்கூடை, தட்டுக்கூடை, பூஜைக்கூடை, விவசாயக்கூடை, எருக்கூடை என பல்வேறு வடிவங்களில் தயாரித்தனர். இவற்றை மக்கள் காய்கறி எடுத்து செல்வதற்கும், கோழிகளை மூடி வைப்பதற்கும், கோவில்களுக்கு பூஜை பொருட்கள் எடுத்து செல்வதற்கும், பூக்களை விற்பதற்கும், சமைத்த சாதத்தை வடிப்பதற்கும் பயன்படுத்தினர். இன்னும் இதன் பயன்பாடுகள் பலப்பல...

தமிழகத்தில் மூங்கில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கேரளா மாநிலத்தில் இருந்து மூங்கில்களை விலைக்கு வாங்கி தொழில் செய்து வருகின்றனர். மூங்கில் விலையும் உயர்ந்துள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை தேடி மக்கள் சென்றுவிட்டனர். இதன்காரணமாக மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத மூங்கில் பொருட்களை செய்து வந்த தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ள மூங்கில் பின்னும் தொழிலாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இதனால் மூங்கில் பின்னும் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மூங்கில் பின்னும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம்

முனுசாமி (மூங்கில் கூடை பின்னும் தொழிலாளி, திருப்பூர்):-

கடந்த 50 வருடமாக மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறேன். மூங்கில் பொருட்கள் விலையைவிட பிளாஸ்டிக் பொருட்களின் விலை குறைவு. எடுத்து செல்வது எளிது. உடனே கிடைக்கும் வசதிதான் மக்களை சுண்டி இழுக்கிறது. அதனால் அவர்களுக்கு பின்னால் ஏற்படும் பாதிப்பு தெரிவது இல்லை. நீடித்த உழைப்பாலும் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதற்கு முனைப்பு காட்டுகின்றனர். மூங்கில் பொருட்களின் விலை அவற்றின் வடிவத்தை பொறுத்து ரூ.150 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது. மாதம் 50 பேர் மட்டுமே இந்த மூங்கில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு மூங்கில் கூடை பின்னும் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த ெதாழில் நலிவடைந்து வருகிறது. நானும் என்னுடைய குடும்ப பொருளாதார தேவைக்காக மற்றொரு தொழிலாக பேனர் அமைக்கும் தொழில் செய்து வருகிறேன். பாரம்பரியமாக செய்து வந்த தொழிலை விட்டுவிட மனமில்லாமல் தொடர்ந்து மூங்கில் கூடை பின்னும் தொழிலையும் செய்து வருகிறேன்.

அழிவின் விளிம்பில் தொழில்

சின்னபுள்ளை (திருப்பூர்):-

நான் கடந்த 20 வருடமாக இந்த தொழில் செய்து வருகிறேன். கோவில் விழாக்கள், முகூர்த்த நாட்களில் மூங்கில் பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால் மற்ற நாட்களில் மக்கள் மூங்கில் பொருட்களை மறந்தே போய்விடுகிறார்கள். அதிலும் கிராம பகுதியில் வசிக்கும் மக்களே அதிகமாக மூங்கில் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். நகரப்பகுதியில் வசிப்பவர்களில் சிலரே ஆரோக்கியத்தின் மீது அக்கறை வைத்து இந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதேபோன்ற நிலை தொடர்ந்தால் மூங்கில் கூடை பின்னும் தொழில் அழிந்து போவதற்கு வாய்ப்பு உருவாகும்.

வள்ளியம்மாள் (காங்கயம் ரோடு, திருப்பூர்):-

மூங்கில் கூடை பின்னும் தொழிலை நாங்கள் குடும்ப தொழிலாக செய்துவந்தோம். 8 வயதிலிருந்தே குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த வேலைகளை செய்து வருகிறேன். கடந்த 65 வருடமாக இந்த தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். மூங்கில் கூடை பின்னும் தொழில் செய்து வந்தவர்கள் வேறு வேலை செய்வதற்கு சென்றுவிட்டதால் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக வருங்கால சந்ததியினர் மூங்கில் கூடை பின்னும் தொழிலாளர்களை மற்றும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை காண்பதே அரிதாகிவிடும். எனவே அரசு இந்த தொழில் அழிந்து போகாமல் காப்பதற்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story