மூவலூர் மார்க்க சகாய சுவாமி கோவில் தேரோட்டம்


மூவலூர் மார்க்க சகாய சுவாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி மூவலூர் மார்க்க சகாய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி மூவலூர் மார்க்க சகாய சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.

மார்க்க சகாயசாமி கோவில்

மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்க சகாயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சவுந்தர்யநாயகி அம்மன் திருக்கல்யாணம் புரிந்த தளமாக விளங்கி வருகிறது. மேலும் இத்தளத்தில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாயசாமியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தளமாகவும் இது விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம்.

தேரோட்டம்

இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா கடந்த மார்ச் 26 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சப்பரத் திருவிழா, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்டவை நடந்து முடிந்து 9-ம் திருநாள் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இதனையொட்டி கோவிலில் இருந்து மார்க்க சகாய சுவாமி சௌந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். பின்னர் மகாதீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. முன்னதாக பக்தர்கள் தங்களது வீடுகள் தோறும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அன்பரசன் உள்ளிட்ட விழா குழுவினர், கிராமவாசிகள் செய்திருந்தனர்.


Next Story