மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதம் -இணைப்பு ரெயில் இல்லாததால் பயணிகள் அவதி
இணைப்பு ரெயில் இல்லாததால் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனர்
மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.16236) மைசூரு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. காலை 10.55 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இதற்கிடையே, இணைப்பு ரெயில் தாமதத்தால் மைசூருவில் இருந்து நேற்று மதுரை வந்த ரெயில் காலை 7.25 மணிக்கு பதிலாக சுமார் 3 மணி நேரம் தாமதமாக காலை 10.40 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த ரெயில் மதியம் 1.30 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைந்தது.
அதாவது, பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து ஊப்ளி ரெயில் நிலையத்துக்கு மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ரெயில் (வ.எண்.12725) நேற்று முன்தினம் இணை ரெயில் தாமதத்தால் மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. இதனால், மைசூருவில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6.20 மணிக்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு புறப்பட்டது. எனவே, இந்த ரெயில் நேற்று மதுரை ரெயில் நிலையத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் இந்த ரெயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அத்துடன், இந்த ரெயிலுக்கு மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இணைப்பு ரெயில் உள்ளது. மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மணியாச்சி ரெயில் நிலையத்துக்கு வழக்கமாக காலை 9.38 மணிக்கு சென்றடையும். இதனால் இந்த ரெயிலில் நெல்லை மற்றும் திருச்செந்தூர் செல்ல முன்பதிவு செய்துள்ள பயணிகள் மணியாச்சி ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-திருச்செந்தூர் சிறப்பு ரெயிலில் (வ.எண்.06679) ஏறி நெல்லை மற்றும் திருச்செந்தூர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், நேற்று இந்த ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இல்லாததால் அவதியடைந்த நெல்லை, திருச்செந்தூர் பயணிகள், மைசூரு ரெயிலிலேயே தூத்துக்குடி ரெயில் நிலையம் செல்ல நேர்ந்தது.