மரக்காணத்தில் துணிகரம் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகள் கைவரிசை
மரக்காணத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்து தாலி சங்கிலியை பறித்த மர்மஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மரக்காணம், ஜூன்.20-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தியாகு (வயது 44). மீனவர். இவரது மனைவி நிஷா (33). இவர்கள் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது அவர்களை மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் பின்தொடர்ந்து வந்தனர்.
மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தியாகு வந்தபோது, அவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவன், திடீரென்று நிஷா கழுத்தில் கிடந்த 6½ பவுன் தாலிசங்கிலியை பறித்தான்.
இதில் நிலை தடுமாறிய நிஷா, கூச்சலிட்டவாறு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இதற்கிடையே தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். இதனால் செய்வதறியாமல் தியாகு தவித்தார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு நிஷாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நிஷா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர நகை பறிப்பு குறித்து மரக்காணம் போலீசில் தியாகு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து வந்து மர்ம ஆசாமிகள் நகை பறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.