தக்கலை பகுதியில் இரவில் அடுத்தடுத்து சம்பவம்: 2 பெண்களிடம் நகை பறித்த மர்மஆசாமிகள்


தக்கலை பகுதியில் இரவில் அடுத்தடுத்து சம்பவம்: 2 பெண்களிடம் நகை பறித்த மர்மஆசாமிகள்
x

தக்கலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒரே நாளில் 2 பெண்களிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒரே நாளில் 2 பெண்களிடம் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கணவருடன் சென்ற பெண்ணிடம்...

தக்கலை அருகே உள்ள பிரம்மபுரத்தை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 55). இவர் குமாரகோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தக்கலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க மனைவி ஸ்ரீகலாவுடன் (50) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்கு உறவினரிடம் நலம் விசாரித்து விட்டு மீண்டும் வீடு நோக்கி புறப்பட்டார். சரியாக 8.10 மணிக்கு தக்கலை தலைமை தபால் நிலையத்தை கடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் அவர்களை பின்தொடர்ந்தனர். மர்மஆசாமிகள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

நகை பறிப்பு

இந்தநிலையில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த ஸ்ரீகலாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் கொண்ட 2 நகைகளை மர்மஆசாமிகள் பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி விட்டனர்.

ஸ்ரீகலாவும், ராஜகுமாரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சத்தம் போட்டனர். ஆனால் அதற்குள் மர்ம ஆசாமிகள் சென்று விட்டனர்.

உடனே ராஜகுமார் பதற்றத்துடன் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தார். அந்த சமயத்தில் மேலும் ஒரு இளம்பெண் ஒரு வித படபடப்புடன் ஓடி வந்து என்னுடைய நகையை மர்மஆசாமிகள் பறித்து விட்டதாக புகார் அளித்தார்.

மற்றொரு சம்பவம்

அதாவது தக்கலை அருகே உள்ள பாலப்பள்ளியை சேர்ந்தவர் அஜிதா (25). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு பணி முடிந்ததும் வீடு நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். பாலப்பள்ளி ஆலயம் அருகில் இரவு 7.50 மணிக்கு வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் அஜிதா கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

ஒரே மாதிரியாக...

இந்த 2 வழிப்பறி சம்பவத்திலும் ஒரே மாதிரியாக மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர். முதலில் அஜிதாவிடம் நகை பறித்த ஆசாமிகள் தப்பிச் சென்ற போது வழியில் ஸ்ரீகலாவிடமும் நகை பறித்திருக்கலாம் என தெரிகிறது. இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததாக நகையை பறிகொடுத்தவர்கள் கூறியதின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மஆசாமிகளின் உருவம் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவெண் பதிவாகி உள்ளதா? ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story