சேலம் அருகே தறித்தொழிலாளி மர்மசாவு கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


சேலம் அருகே தறித்தொழிலாளி மர்மசாவு  கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x

சேலம் அருகே தறித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேலம்

சேலம்,

தறித்தொழிலாளி

சேலம் அல்லிக்குட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 50). தறித்தொழிலாளி. இவர் கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர், இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனிடையே, வீராணம் எம்.பாலப்பட்டி இருட்டுக்கல் முனியப்பன் கோவிலுக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் நேற்று முன்தினம் பாலு இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் மீது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

சாவில் சந்தேகம்

மேலும், பாலுவின் மனைவி கோமதி மற்றும் உறவினர்களும் அங்கு வந்தனர். அப்போது, பாலுவின் தலையில் காயம் இருந்ததால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை யாரோ தலையில் தாக்கி பள்ளத்தில் தள்ளியிருக்கலாம் என போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பாலு எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில், தறித்தொழிலாளி பாலுவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரது உறவினர்கள் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் பாலுவின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

வீராணம் சுற்றுவட்டார பகுதியில் 27-ந் தேதி இரவு பலத்த மழை பெய்தது. அப்போது, பாலு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மழை வெள்ளத்தில் வழுக்கி பள்ளத்தில் விழுந்து இறந்தாரா? அல்லது வாகனம் ஏதும் அவர் மீது மோதிய விபத்தில் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story