களக்காடு அருகே புது மாப்பிள்ளை மர்ம சாவு
களக்காடு அருகே, திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களக்காடு:
களக்காடு அருகே, திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
புதுமாப்பிள்ளை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்தவர் ஜேசுஜெயராஜா (வயது 26), வேன் டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதம் ஆகிறது. ஜேசுஜெயராஜாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.
நேற்று முன்தினம் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பின்னர் வெளியே சென்ற அவர் மாலையில் மது அருந்திய போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் அவர் படுக்கை அறைக்கு சென்று படுத்து தூங்கினார். சிறிது நேரத்திற்கு பிறகு கல்பனா சென்று பார்த்தார். அப்போது, ஜேசுஜெயராஜா மயக்க நிலையில் கிடந்தார்.
சாவு
இதனால் பதறிப்போன அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜேசுஜெயராஜாவை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி கல்பனா களக்காடு போலீசில் புகார் செய்தார். ஜேசுஜெயராஜா இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அசைவ உணவு காரணமா?
இதற்கிடையே, அசைவ உணவு சாப்பிட்டதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்பது பற்றியும் களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் நேசமணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆன 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.