சிங்கப்பூரில் வாலிபர் மர்ம சாவு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் கள்ளக்குறிச்சி அருகே போக்குவரத்து பாதிப்பு


சிங்கப்பூரில் வாலிபர் மர்ம சாவு: இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் கள்ளக்குறிச்சி அருகே போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் வாலிபர் மா்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கள்ளக்குறிச்சி அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் மணிகண்டன் (வயது 25). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். அங்கு அவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் மணிகண்டன், அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக அவருடைய குடும்பத்தினருக்கு நிறுவனத்தினர் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு மணிகண்டனின் குடும்பத்தினர் அதிா்ச்சியடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

சாலை மறியல்

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் நண்பர் கடந்த வாரம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவர் சென்றபோது தான் மணிகண்டன் இறந்துள்ளார். எனவே மணிகண்டனின் சாவுக்கு அவருடைய நண்பர் தான் காரணம், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மணிகண்டனின் உறவினர்கள் நேற்று ஆலத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சு வார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story