தொழிலாளி மர்ம சாவு
கச்சிராயப்பாளையம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மீராலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் மகன் ஜெயசூரியா (வயது 18) என்பவர், வெல்டருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இதற்காக ஜெயசூரியா மற்றும் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் சர்க்கரை ஆலை வளாகத்தின் முன்பு உள்ள வாடகை குடியிருப்பில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் அவர் தனது நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார்.
பின்னர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஜெயசூரியா எழுந்திருக்காததால், அவரது நண்பர்கள் எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த நண்பர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஜெயசூரியாவை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீசார் விரைந்து வந்து, இறந்த ஜெயசூரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயசூரியா சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.