மர்ம காய்ச்சல் பரவல்; வீடுகள்- பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
நெல்லையில் மர்ம காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து வீடுகள்- பள்ளிகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
தமிழகம் முழுவதும் தற்போது காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பரவுகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவியது. இதை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் 8 வயது சிறுமிக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த சுகாதார துறையினர் நேற்று ராமையன்பட்டி பகுதியில் முகாமிட்டனர். சுகாதார நல பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி குழுவினர் வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரவல் உள்ளதா? என ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ''இந்த பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் பரவி வருகிறது. தமிழக அரசு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.