2 கிராம் நகைக்காக 1-ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம நபர்


2 கிராம் நகைக்காக 1-ம் வகுப்பு மாணவியை கடத்திய மர்ம நபர்
x

திருவண்ணாமலையில் 2 கிராம் நகைக்காக 1-ம் வகுப்பு மாணவியை மர்ம நபர் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2 கிராம் நகைக்காக 1-ம் வகுப்பு மாணவியை மர்ம நபர் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி கடத்தல்

திருவண்ணாமலையை சேர்ந்த 6 வயது சிறுமி நடுநிலைப்பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை நேற்று காலை சுமார் 8.40 மணியளவில் பள்ளியில் விட்டு தாய் சென்றார்.

மாணவியின் காதில் தங்க கம்மல் இருந்துள்ளது. இதை கவனித்த மர்ம நபர் 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவியிடம் நைசாக பேசி திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு அழைத்த சென்றுள்ளார்.

மாணவிக்கு சாக்லேட், சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் பாட்டிலை வாங்கி கொடுத்துவிட்டு மாணவியின் காதில் அணிந்திருந்த 2 கிராம் கம்மலை கழட்டி கொண்டு அவரை திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி செல்லும் மன்னார்குடி விரைவு ரெயிலில் ஏற்றிவிட்டு மர்ம நபர் தப்பி சென்று விட்டார்.

மாணவியின் தாய் மதிய உணவு கொடுப்பதற்காக பள்ளிக்கு சென்றார். அப்போது மாணவி காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக அவர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் மாணவியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இதற்கிடையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்ற மன்னார்குடி ரெயிலில் இருந்து மாணவி கீழே இறங்கி வந்துள்ளார். தனியாக நின்று கொண்டிருந்த மாணவியை கண்ட ரெயில்வே போலீசார் அவரை மீட்டு விசாரித்து உள்ளனர்.

அப்போது அந்த மாணவி திருவண்ணாமலையை சேர்ந்தவர் என்றும், அவரது தாய் மற்றும் தந்தை, படிக்கும் பள்ளியின் விவரங்களை தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து காட்பாடி ரெயில்வே போலீசார் திருவண்ணாமலை ரெயில்வே போலீஸ் நிலையம் மூலம் திருவண்ணாமலை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து திருவண்ணாமலை டவுன் போலீசார் காட்பாடிக்கு சென்று ரெயில்வே போலீசாரிடம் இருந்த மாணவியை பாதுகாப்பாக அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் பள்ளியில் இருந்து ரெயில் நிலையம் வரை உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களில் இருந்து காட்சி பதிவுகள் உதவியுடன் மாணவியை கடத்திய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story