கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
திருவாரூர் அருகே தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் அருகே தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அம்ருத்சரோவர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் புதிதாக தூர்வாரப்பட்டு, அந்த குளங்களின் ஓரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைத்து சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் அம்ருத்சரோவர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் தூர்வாரப்பட்டு அனைத்து குளங்களின் ஓரங்களிலும் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
கொடிக்கம்பம் சேதம்
இந்த நிலையில் திருவாரூர் அருகே புலிவலம் தாமரை குளத்தின் அருகில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதிதாக கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை கொடியேற்றுவதற்காக அந்த பகுதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சென்றனர். அப்போது தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் உடைக்கப்பட்டு சாய்ந்து கிடந்தது. மேலும் மேடையும் உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் கொடிக்கம்பம் மற்றும் கொடி மேடையை சேதப்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்ற அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் கொடிமேடையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.