காதலி கிரீஷ்மா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்


காதலி கிரீஷ்மா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்
x

மாணவருக்கு விஷம் கொடுக்கப்பட்ட இடமான காதலி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடயங்களை அழிக்க முயற்சியா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

மாணவருக்கு விஷம் கொடுக்கப்பட்ட இடமான காதலி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடயங்களை அழிக்க முயற்சியா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவரை கொன்ற காதலி

கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். குமரி மாவட்டம் ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (22). இவர்கள் இருவரும் காதலர்கள்.

இதற்கிடையே கிரீஷ்மாவுக்கு ஒரு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தநிலையில் கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமாரும் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் காவலில் விசாரணை

தற்போது கிரீஷ்மாவை 7 நாட்களும், தாய் சிந்து, நிர்மல்குமார் ஆகிய 2 பேரை 5 நாட்களும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த நேற்றுமுன்தினம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி போலீசார் கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவரை கொன்றது ஏன்? இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பாக விசாரணை நடந்தது. மேலும் ஆதாரங்களையும் திரட்டி வருகின்றனர். இதற்கிடையே மாணவருக்கு விஷம் கொடுக்கப்பட்ட இடமான கிரீஷ்மாவின் வீட்டை போலீசார் பூட்டி சீல் வைத்திருந்தனர். இந்தநிலையில் கிரீஷ்மாவை அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த தயாராக இருந்தனர்.

காதலி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள்

நேற்றுகாலையில் கிரீஷ்மாவின் வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்த நிலையில் கிடந்தது. இதனை அறிந்த பளுகல் மற்றும் பாறசாலை போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். கிரீஷ்மாவை வீட்டுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த இருந்த நிலையில் இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் தடயங்களை அழிக்க கிரீஷ்மாவுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் வீட்டிற்குள் புகுந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த ஆவணங்கள் ஏதேனும் திருடு போய் இருக்கிறதா? என விசாரணை நடக்கிறது. மர்மநபர்களின் நடமாட்டம், அந்த பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மீண்டும் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story