பசுமாட்டை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் கடத்திச்சென்ற மர்மநபர்கள்


பசுமாட்டை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் கடத்திச்சென்ற மர்மநபர்கள்
x

வேலூரில் பசுமாட்டினை குண்டுக்கட்டாக சரக்குவேனில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

வேலூரில் பசுமாட்டினை குண்டுக்கட்டாக சரக்குவேனில் தூக்கிப்போட்டு கடத்திச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல்

வேலூர் மாநகரில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. அந்த மாடுகள் ஆங்காங்கே கிடைக்கப்பெறும் உணவுகளை தின்று விட்டு சாலையிலேயே படுத்து தூங்கி விடும். பாலை மட்டும் கறந்து விட்டு உரிமையாளர்கள் சென்றுவிடுவார்கள். இந்த மாடுகளால் மாநகராட்சியில் போக்குவரத்து பாதிப்புகள் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க வேலூர் -ஆற்காடு சாலையில் படுத்துக் கிடந்த ஒரு பசு மாட்டினை சரக்கு வேனில் வந்த சில மர்ம நபர்கள் அலேக்காக தூக்கிக் கொண்டு செல்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், சாலையில் படுத்துக்கிடக்கும் மாட்டினை ஒரு சரக்கு வேனில் வந்த மர்மநபர்கள் 4 பேர் வண்டியில் ஏற்ற முயன்றனர். ஒருவர் மாட்டின் வாலினை பிடித்து உள்ளே இழுப்பதும், மற்றவர்கள் அதை தூக்கி வண்டியில் ஏற்றுவதும், மாட்டினை ஏற்றிய பின்னர் உடனடியாக வேனை வேகமாக ஓட்டிச் செல்வதும் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அந்தபகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து மர்மநபர்கள் திருடிச் செல்வதாக சமூகவலைதளங்களில் பரப்பி உள்ளார்.

போலீசார் விசாரணை

இதேபோன்று தோட்டப்பாளையம் சோளாபுரி அம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்து மர்மநபர் ஒருவர் பேட்டரியை திருடிச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. பொதுமக்கள் கூறுகையில், ''வேலூரில் இரவு நேரங்களில் ஏராளமான மர்மநபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலீசார் தெருக்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, மாடு திருட்டு மற்றும் ஆட்டோ பேட்டரி திருட்டு தொடர்பாக புகார்கள் ஏதும் வரவில்லை.

எனினும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story