கடையின் சுவரில் துளையிட்டு வெள்ளி நகைகள் திருடிய மர்மநபர்கள்
தூத்துக்குடியில் கடையின் சுவரில் துளையிட்டு வெள்ளி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சாந்திநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 60). இவர் சிதம்பரநகர் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் வெள்ளி நகைகள் விற்பனைக்காக வைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலையில் முருகன் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கடையில் இருந்த வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மர்மநபர்கள் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து நகைகளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. சுமார் ரூ.58 ஆயிரம் மதிப்புள்ள 120 ஜோடி சிறிய வெள்ளி கம்மல்கள், 6 வெள்ளி மாலைகள், 20 வெள்ளி மோதிரங்கள், வெள்ளி பிள்ளையார், ஐம்பொன் வளையம் உள்ளிட்டவை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.