4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபர்கள்


4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபர்கள்
x

வேலூரில் 4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்


வேலூரில் 4.45 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ள நோட்டுகள்

வேலூர் பழைய பஸ்நிலையம் அருகே காமராஜர் சிலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள செல்போன் கடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மர்மநபர்கள் செல்போன் வாங்க வந்தாக கூறப்படுகிறது.

அப்போது கடைக்காரரிடம் அவர்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். அவர் பணத்தை எண்ணும்போது அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் இது கள்ளநோட்டு என்பதை அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நோட்டுகளை வாங்கி கொண்டு அந்த நபர்கள் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சாலையில் வீசிச்சென்றனர்

சற்று தொலைவில் 500 மற்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சாலையில் வீசப்பட்டு கிடந்த ரூ.4.45 லட்சம் நோட்டுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது அவை கள்ளநோட்டுகள் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வேலூர் காந்திநகர் பாபுராவ் தெருவில் ஆந்திராவை சேர்ந்த கள்ளநோட்டு கும்பலுக்கும், தமிழகத்தை சேர்ந்த கும்பலுக்கும் கள்ளநோட்டை மாற்றுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அங்கு கூடியதால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.


Next Story