ரூ.32 லட்சம் நகையுடன் மாயமான வாலிபர் கைது
ரூ.32 லட்சம் நகையுடன் மாயமான வாலிபர் கைது
கோவை,
கோவையில் இருந்து ரூ.32 லட்சம் நகையுடன் மாயமான வடமாநில வாலிபரை போலீசார் மேற்கு வங்காளத்தில் வைத்து சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ரூ.32 லட்சம் நகை
கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் சாலையை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின் (வயது 35), இவர் அந்தப்பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய பட்டறையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சதாம் உசேன் (வயது 28) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்த நகைப்பட்டறையில் தயாரிக்கப்படும் நகையை, அருகில் உள்ள கடையில் கொடுத்து லேசர் சாலிடரிங் மூலம் ஒட்ட வைப்பது வழக்கம். அதன்படி பியூஸ் ஜெயின் தன் பட்டறையில் வேலை பார்த்து வந்த சதாம் உசேனிடம் ரூ.32 லட்சம் மூக்குத்தி, கம்மல், கைச்செயின் உள்ளிட்ட நகைகளை கொடுத்து அருகே உள்ள கடையில் அவற்றை சாலிடரிங் செய்ய கொடுக்க சொன்னார்.
ஊழியர் மாயம்
நகையை பெற்றுச்சென்ற சதாம் உசேன் நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பியூஸ் ஜெயின், சதாம் உசேனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. உடனே அவர் சாலிடரிங் கொடுக்க கூறிய கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டார். அதற்கு அந்த கடை ஊழியர்கள் சதாம் உசேன் வரவில்லை என்று கூறியதால் பியூஸ் ஜெயின் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த ஊழியர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தபோது அது பூட்டப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
தனிப்படை விரைவு
அதில் சதாம் உசேன், அந்த நகையுடன் தனது சொந்த மாநிலத்துக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை மேற்கு வங்காளம் விரைந்தது. பின்னர் அவர்கள் உள்ளூர் போலீஸ் உதவியுடன் சதாம் உசேன் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
மேற்கு வங்காளத்தில் கைது
அப்போது அவர் அங்குள்ள ஒரு பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 589 கிராம் நகை மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் அவரை ரெயில் மூலம் கோவை அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
கோவையில் ரூ.32 லட்சம் நகையுடன் மாயமான வடமாநில வாலிபரை ஒரே வாரத்தில் போலீசார் கைது செய்து அவரிடம் நகையை மீட்க காரணமாக இருந்த போலீசாரை கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.