திருமங்கலம் ரெயில்வே கேட் அருகே அபாய சங்கிலியை இழுத்து மைசூரு ரெயிலை நிறுத்திய மர்ம ஆசாமி - போக்குவரத்து பாதிப்பு


திருமங்கலம் ரெயில்வே கேட் அருகே அபாய சங்கிலியை இழுத்து  மைசூரு ரெயிலை நிறுத்திய மர்ம ஆசாமி - போக்குவரத்து பாதிப்பு
x

திருமங்கலம் ரெயில்வே கேட் அருகே அபாய சங்கிலியை இழுத்து மைசூரு ரெயிலை மர்ம ஆசாமி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் ரெயில்வே கேட் அருகே அபாய சங்கிலியை இழுத்து மைசூரு ரெயிலை மர்ம ஆசாமி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடுவழியில் நின்ற ரெயில்

தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம் வழியாக பெங்களூரு, மைசூருக்கு தினந்தோறும் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.15 மணிக்கு திருமங்கலம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் தூத்துக்குடியில் இருந்து மைசூரு நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே வந்த போது திடீரென நடுவழியில் நின்றது. திடீரென அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால், ரெயில் உடனடியாக நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில் என்ஜின் டிரைவர்கள், அதிகாரிகள் மற்றும் ரெயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, பெட்டிகளில் ஆய்வு செய்தனர். பின் வரிசையில் இருந்த ரெயில் பெட்டியில்தான் அபாய சங்கிலி இழுக்கப்பட்டது தெரிய வந்தது. ஆனால், ரெயிலை நிறுத்திய ஆசாமி யார் என தெரியவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதனை தொடர்ந்து 20 நிமிடம் தாமதத்திற்கு பின்பு மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் திருமங்கலம் ரெயில் நிலையம் சென்றது. அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி புறப்பட்டது.

முன்னதாக திருமங்கலம் ெரயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை மறைத்து எக்ஸ்பிரஸ் ரெயில் நின்றதால் ரெயில்வே கேட் திறக்க முடியாமல் 20 நிமிடத்திற்கு மேலாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் நெடுநேரம் காத்திருந்ததால் கடும் அவதி அடைந்தனர்.

அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியவர் யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story