நடுக்கடலில் அதிகாரிகள் பறிமுதல் செய்த படகை மீனவர்கள் பறித்ததால் பரபரப்பு


நடுக்கடலில் அதிகாரிகள் பறிமுதல் செய்த படகை மீனவர்கள் பறித்ததால் பரபரப்பு
x

பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் சுருக்குமடி வலையில் மீன்பிடித்ததால் அதிகாரிகள் பறிமுதல் செய்த படகை மீனவர்கள் பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

பரங்கிப்பேட்டை:

புதுச்சேரி மற்றும் கடலூரை சேர்ந்த சில மீனவர்கள், அரசின் தடையை மீறி சுருக்குமடி வலையை பயன்படுத்தி பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதியில் மீன்பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் மீன்வளத்துறை ஆய்வாளர் பக்ருதீன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் படகில் நடுக்கடலில் ரோந்து சென்றனர்.

அதிகாரிகள் மீது மோதுவதுபோல்...

அப்போது சில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். உடனே மீன்வளத்துறை அதிகாரிகள் ஒரு படகையும், சுருக்குமடி வலையையும் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், தங்களது படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகளின் படகு மீது மோதுவதுபோல் வேகமாக சென்றனர்.

இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள், தங்களது படகை ஒதுக்கிக்கொண்டனர். இதையடுத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்திருந்த படகு மற்றும் சுருக்குமடி வலையை மீனவர்கள் பறித்து சென்றனர்.

அதிகாரிகள் திகைப்பு

மீனவர்களின் படகு மோதி இருந்தால் அதிகாரிகளின் படகு கவிழ்ந்து பெரிய அளவில் விபத்து நேர்ந்திருக்கும். என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த அதிகாரிகள், அவசர அவசரமாக நடுக்கடலில் இருந்து கரை திரும்பினர்.

மேலும் இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story