தூத்துக்குடியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்


தூத்துக்குடியில்பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 8:24 AM GMT)

தூத்துக்குடியில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியை தூய்மையாகவும், மாசில்லா நகரமாகவும் மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சியில் உள்ள முக்கிய பகுதிகளில் வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக ஜெயராஜ் சாலை மற்றும் 4-ம் கேட் சாலையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே உள்ள பூங்கா மற்றும் சுகம் ஓட்டல் அருகில் உள்ள ரவுண்டானாவிலும் வண்ண விளக்குகளுடன், செயற்கை நீரூற்று அமைக்க முடிவு செய்து, பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் அண்ணா சிலை பின்புறம், கலைஞர் அரங்கம் அருகில், மில்லர்புரம் மற்றும் எட்டயபுரம் ஹவுசிங் போர்டு ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் வரும் காலங்களில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

குடிநீர்

அதன்பிறகு தூத்துக்குடியின் பிரதான நீரேற்று நிலையமான ராஜாஜி பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வரும் குடிநீரின் அளவு, மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் போன்றவை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் மேயர் கூறும்போது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு இங்கிருந்து தான் குடிநீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைக்கும் வகையில் தற்போது குடிநீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடன இருந்தனர்.

கோரிக்கை

எம்பவர் இந்தியா, சுற்றுச்சூழல், நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கவுரவ செயலாளர் சங்கர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்து உள்ளார். அந்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை ஆன்லைனில் நேரிடையாக செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும். தற்போது இந்த தொகையை நகராட்சி நிர்வாக ஆணையகரத்தின் இணையதளத்தின் மூலமாகத் தான் செலுத்த வேண்டி உள்ளது. பணம் செலுத்திய பின்னர் இந்த தொகை நேரிடையாக தூத்துக்குடி மாநகராட்சியின் கணக்கில் செலுத்தப்பட்டதாக இணையதளம் இந்த தகவலை காண்பிக்கவில்லை. மேலும் கடந்த 30.09.2023 அன்று செலுத்தப்பட்ட சொத்து வரி மற்றும் தண்ணீர் வரிக்கான ரசீதுகளை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பிரிண்ட் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி உடனடியாக ரசீதை பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது.

ஆகையால் தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை ஆன்லைனில் நேரிடையாக பணம் செலுத்தி ரசீதை உடனடியான பிரிண்டு எடுக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story