ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் -சீமான் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுவதாக சீமான் அறிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிமனை அமைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடபோவதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார்.
அதன்படி ஈரோடு சூரம்பட்டி வலசு நால்ரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு, வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோட்டை சேர்ந்த மேனகா நவநீதன் (வயது 36) என்பவர் போட்டியிட போவதாக அறிவித்தார்.
மருந்து விற்பனை பிரதிநிதி
ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. பூசாரி காலனி சென்னிமலை வீதியில், வாடகை வீட்டில் கணவர் நவநீதன், மகன் அறிவன் ஆகியோருடன் வசித்து வரும் மேனகா ஆடை வடிவமைப்பு படிப்பில் பி.எஸ்சி. முடித்துள்ளார். தற்போது மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.
மேலும் நாம் தமிழர் கட்சியில் தொகுதி மகளிர் பாசறை இணை செயலாளராகவும் உள்ளார்.