நாடார் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க 13-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் வரவேற்று பேசினார். துணை தலைவர் பால்வண்ணன் ஆண்டறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். சிறப்பு விருந்தினராக மண்டல தலைவர் டி.வி.பி.வைகுண்ட ராஜா கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் வியாபாரிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார். மேலும் மாவீரன் நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் பெண்ணுக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டது. பின்னர் அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் வீனா கண் தானம் பற்றி விரிவாக பேசினார். இதையடுத்து, நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தனது குடும்பத்தினர் உள்ளிட்ட 10 பேர் கண் தானம் செய்வதற்கான ஒப்புதல் படிவத்தினை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி டாக்டர் ரவீனாவிடம் வழங்கினார். சங்க புதிய பொருளாளராக செல்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக சங்க தொடக்க விழாவை முன்னிட்டு நாடார் சங்கமும், அரவிந்த் கண் ஆஸ்பத்திரியும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் 110 பயணாளிகள் பயன் பெற்றனர். நிகழ்ச்சிகளை மாவட்ட துணை தலைவர் யாபேஷ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், சோழர் செல்வின், சண்முகபார்த்தீபன், அரசு வக்கீல்கள் சாத்ராக், பாரிகண்ணன், வக்கீல்கள் எட்வர்ட், திலீப்குமார், குருராமன் மற்றும் மோகனசுந்தரம் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில், சங்க துணை தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.
திருச்செந்தூர் கோவில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக ரூ.200 கோடி நிதி வழங்கிய ஹெச்.சி.எல். நிறுவனர் சிவ் நாடாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கோவில் வளர்ச்சி திட்ட பணிகளின் போது வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க கோவில் வியாபாரிகளுக்கு முன்னேற்பாடாக கடை நடத்த இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நகராட்சி தினசரி மார்க்கெட் கட்டும் போது, ஏற்கனவே இருந்த பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை வழங்க வேண்டும். நகராட்சியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்யும் திருநங்கைகளுக்கு போலீசார் விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் வியாபாரிகள் தங்கள் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.