நாகை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நாகை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்று தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்


தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்று தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து சென்றனர்.

இதில் மோசடி செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர்.

கலெக்டரிடம் மனு

பின்னர் பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க பொதுமக்களை, போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து அவர்கள் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த போது கூறியதாவது:-

நாகையில் மிகவும் பழமைவாய்ந்த நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் நாகை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணம் கட்டியுள்ளோம்.

பணத்தை திரும்பி தரவில்லை

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் தங்களது ஓய்வூதிய பணத்தை இந்த தனியார் நிதி நிறுவனத்தில் அதிகளவில் டெபாசிட் செய்துள்ளோம். அது மட்டும் இன்றி இந்த நிதி நிறுவனத்தில் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு அதன் வாயிலாகவும் பணம் செலுத்தியுள்ளோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தை திருப்பி தராமல் அந்த தனியார் நிதி நிறுவனம் இழுத்தடித்து வருகிறது.

பல முறை நிதி நிறுவனத்தையும், அதன் உரிமையாளரையும் தொடர்பு கொண்டும் எவ்வித பலனும் இல்லை. எனவே நிறுவனத்தினடம் இருந்து மோசடி செய்த பணத்தை திருப்பி தர வேண்டும்.

பரபரப்பு

பணத்தை திருப்பி தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.. 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story