நாகை கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
நாகை கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
பூரண மதுவிலக்கு
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் சார்பில் பூரண மதுவிலக்கு வேண்டி கையெழுத்து இயக்கம் கடந்த 1 வாரத்திற்கு மேலாக நடத்தப்பட்டது.
இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பூரண மதுவிலக்கு வேண்டி பெறப்பட்ட கையெழுத்து இயக்கத்தின் அசல் நகலை கலெக்டரிடம் வழங்க, நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அஞ்சம்மாள் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாசலில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அப்போது ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என கூறி போலீசார் தடுத்தனர். இதையடுத்து போலீசாரின் அனுமதியை மீறி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பரபரப்பு
தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தின் அசல் நகலை போலீசார் அனுமதியுடன் 5 பேர் மட்டும் கலெக்டரிடம் வழங்கினர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக சென்று முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.