நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 16 Jun 2023 1:00 AM IST (Updated: 16 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

நாகப்பட்டினம்

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 61 நாட்கள் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எல்லை வரை சிறியவகை படகுகள் (பைபர் படகுகள்) மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

கடலுக்கு சென்றனர்

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி விசைப்படகுகள் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு, பழுது பார்த்தல், வர்ணம் தீட்டுதல், என்ஜினை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான மராமத்து பணிகளை மீனவர்கள் ேமற்கொண்டு வந்தனர்.

தடைக்காலம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை முதலே நாகை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தொடங்கினர். முன்னதாக ஆழ் கடலில் தங்கி மீன் பிடிப்பதற்கு ஏதுவாக உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், டீசல், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் அடங்கிய அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்திருந்தனர். விசைப்படகில் புறப்படுவதற்கு முன்னதாக மீனவர்கள் சூடமேற்றி வழிபாடு செய்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வங்கக்கடலில் விசைப்படகுகள் வரிசையாக அணிவகுத்து சென்றதை அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் நின்றபடி ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை தூண்டில் முள்வளைவு பகுதியில் விசைப்படகுகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆழ்கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு பல நாட்கள் தங்க வேண்டி இருப்பதால் மீனவர்கள் தேவையான உணவு பொருட்களையும் உடன் எடுத்து சென்றனர்.


Next Story