காற்று வாங்கும் சோழர்கால நாகை துறைமுகம்


காற்று வாங்கும் சோழர்கால நாகை துறைமுகம்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:00 PM GMT (Updated: 25 Jan 2023 7:00 PM GMT)

கடல் கடந்து வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய சோழர்கால நாகை துறைமுகம் தற்போது காற்று வாங்குகிறது. இந்த துறைமுகம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நாகப்பட்டினம்

கடல் கடந்து வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய சோழர்கால நாகை துறைமுகம் தற்போது காற்று வாங்குகிறது. இந்த துறைமுகம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சோழர்கால துறைமுக நகரம்

சோழர்களின் ஆட்சி காலத்தில் தென் இந்தியாவின் முக்கிய துறைமுக நகரமாக நாகை நகரம் விளங்கியது. நாகை துறைமுகத்தில் இருந்து பன்னாட்டு சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. நாகையில் இருந்து கைவினை பொருட்கள், வாசனை திரவியங்கள், வெங்காயம், மிளகாய், சிமெண்டு உள்ளிட்டவை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில், ஆடை, ஆபரணங்கள் நாகையில் இறக்குமதி செய்யப்பட்டு, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி என கடல் கடந்த வணிகத்தில் நாகை துறைமுகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

பயணிகள் போக்குவரத்து கப்பல்

வெளிநாடுகளை சேர்ந்த வணிகர்கள் நாகை வந்து சென்றனர். சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமின்றி நாகையில் இருந்து பயணிகள் கப்பலும் இயக்கப்பட்டன. நாகையில் இருந்து சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்த காலம் நாகையின் பொற்காலமாக இன்றளவும் கருதப்படுகிறது.

ஆனால் காலத்தின் சூழ்ச்சியால் நாகை துறைமுகம் தனது பழைய பொற்காலத்தை மறந்து தற்போது காற்று வாங்கும் இடமாக மாறி விட்டது.

கவர்ச்சியான அறிவிப்புகள்

நாகை துறைமுகம், அனைத்து பருவநிலைகளிலும் இயங்கக்கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்தப்படும் என அரசிடம் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவரும். ஆனால் அவை செயலாக்கம் பெறவில்லை. நாகை துறைமுகத்தில் இருந்து பழைய காலம் போல கப்பல் போக்குவரத்து நடப்பது என்பது கானல் நீராக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நாகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்கினால் தான் மாவட்டம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் எனவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். சோழர் காலத்தில் கோலோச்சிய நாகை துறைமுகம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்று எதிர்பார்க்கின்றனர்.

சட்டசபையில் தீர்மானம்

இதுகுறித்து நாகை எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் கூறும்போது:-

நாகையின் சிறப்பை உலகறிய செய்ததில் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய பங்கு உண்டு. பன்னாட்டு வணிகத்தை செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாகை துறைமுகம் இன்றைக்கு மூடிக்கிடக்கின்றது. தமிழர்களின் கடல் வணிகத்திற்கு பெருமை சேர்த்த நாகை துறைமுகம் பயனற்று, செயலற்று கிடப்பது வேதனை அளிக்கிறது.

பழவேற்காடு முதல் தேங்காய்ப்பட்டினம் வரை உள்ள தமிழரின் தொன்மையான கடல் வழித்தடமும், உலகத்தோடு நாம் உறவாடிய கடல் வழி வணிகமும் துறைமுகங்களும் ஏறத்தாழ இல்லாமல் போய்விட்டன. அந்த வகையில் நாகை துறைமுகத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த நிலையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்த தீர்மானம் குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாகை துறைமுகம் புத்துயிர் பெறும் என்று நம்புகிறேன்.

வளர்ச்சிக்கான முதல் படி

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் அரவிந்த் குமார் கூறும்போது:-

தமிழகத்தில் உள்ள சிறிய துறைமுகங்களின் முதன்மையானதாக நாகை துறைமுகம் திகழ்ந்தாலும், தூத்துக்குடி துறைமுகம் வளர்ச்சி கண்ட பின்னர் நாகை துறைமுகம் வழியாக கடல் வணிக பரிவர்த்தனைகள் குறைந்துவிட்டன. தொடர்ந்து நவீன காலத்துக்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது துறைமுகம் செயலிழந்து விட்டது. பழமையான நாகை துறைமுகத்தை, சர்வதேச தரத்துடன் பசுமை சூழல் துறைமுகமாக தரம் உயர்த்தி கப்பல் போக்குவரத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர் துறைமுகத்தை மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி மேம்படுத்தியதை போல், நாகை துறைமுகத்திற்கும் நிதி ஒதுக்கி புத்துயிர் கொடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரும் கடுவையாறை நேராக கடலில் கலக்க செய்தால், நாகை துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான மிதவை படகுகள் எந்த இடையூறுமின்றி வந்து செல்ல முடியும். நாகையை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல, முதல் படியே துறைமுகத்தை பயன்படுத்துவது என்பதாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story